Wednesday, September 12, 2012

தாயுள்ளம்






 தாயுள்ளம்

ஆயிர(ம்) உறவுகள் வந்தாலும்,அன்னையைப் போலாகுமா ?
நோயினிற் நாம் படுக்க-கண்-நொடிப்பொழுதும் துஞ்சாமல்,
பாயினிற் படுத்து வாடும் நம் பக்கத்திற் பரிதவித்து,
வாயினிற் மருந்தூற்றி,வருத்தத்தை மனஞ்சுமக்க
கோயிற் பலசென்று குலதெய்வம் வேண்டி நிற்கும்
தாயின் கருணையுள்ளம் தரணியில் யாருக்குண்டு ?

உச்சிமுகர்ந்து,உரிமையாய் முத்தமிட்டு,உயர்கல்வி நாம் பயில,
குச்சி யெடுத்தடிக்கு மந்த குருவைப்போலம்மால்
மெச்சி நமைப்புகழ்ந்து மேதினியில் உயர்வு பெற
வச்சிருக்கும் சிறுவாட்டில் வளர்ந்துவிட்ட சேமிப்பால்
எத்திக்கும் புகழ்பேற்று, ஏற்றம்பேற கல்வி தந்து
காத்திட்ட கருணை தெய்வம் அன்னையன்றி யாருளரோ ?

ருசியாக பலவிதமாய் சுவையேற்றித்தான் சமைத்து
பசியாற நமக்களித்து பாசத்தையும் அதிற்கலந்து-நடு
நிசியாக இருந்தாலும் நாம் துயில,அவர் விழித்து
வசதியாய் நாம் வாழ தன் வாழ்வை அர்ப்பணித்து-தன்
உசுரையும் மதிக்காமல் நம் நலனைப் பெரிதா யெண்ணி
வசிக்கின்ற யுண்மைத் தெய்வம்,அன்னையை மறக்கலாமோ ?
                               -இளசை விஜயன்

2 comments:

  1. கண் நிறைந்தது, கண்ணீரால் ; என் நெஞ்சமும் நிறைகிறது, என் அம்மாவின் நினைவுகளால்....

    நான் என் தாயிடம் வளர்ந்தது மிகச்சில மாதங்கள் மட்டுமே; ஆனால் என் வாழ்க்கையை சிறப்பிக்க பிரிவினைத்தாங்கிகொண்ட தாய்மையின் தியாகத்தை நான் இப்போது உணர்கிறேன் - என் மகள் மேற்படிப்புக்காக தொலைதூரம் போன வலியுடன்...
    மென்மையும் வலிமையையும் பெண்ணின் தாய்மையில்... !

    மிக நன்றி, இளசை விஜயன்;

    ReplyDelete
  2. தாயிற் சிறந்த கோயிலுமில்லை

    ReplyDelete