ஜனன ஜாதகத்தில் சனி இருக்கும்
இராசியை, கோசார கிரகங்கள் கடக்கும் போது ஏற்படும் தாக்கங்கள் –
கோசார சூரியன்
- ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகருக்கு தொழிலில், பணியில் அமைதியின்மை, சஞ்சலம்,
மனவருத்தம் ஆகியவை ஏற்படும். எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், முயற்சித்தாலும் செய்யும்
தொழிலுக்கு பணிக்கு நியாயமான பங்கை அளிக்க முடியாது. அதன் காரணமாக ஜாதகர் தனது உயர்
அதிகாரிகளால் குற்றம் சாட்டப்படுவார். பொருளாதாரக் கஷ்டங்களையும் அனுபவிக்க நேரிடும்.
கோசார சந்திரன்
- ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் குற்றஞ்சாட்டப்படுவார். தேவையற்ற பணச் செலவுகள்
ஏற்படும். மனதளவிலும் அமைதியற்ற நிலை நிலவும்.
கோசார
செவ்வாய் - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகருக்கு பணியிடத்தில் உடன் பணிபுரியும்
நண்பர்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தி, தொல்லைகளைத் தருவர். வியாபாரத்திலும் எதிரிகளால்
அதிக தடைகளை, தொல்லைகளை அனுபவித்து, பண இழப்புக்கும் ஆளாக நேரும். ஜாதகியானால், அவள்
கணவருக்கு விரும்பத்தகாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டு அதன் காரணமாக மனதில் அமைதியின்மையும்,
வெட்டிச் செலவுகளும் ஏற்படும்.
கோசார புதன்
- ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் வர்த்தக பரிவர்த்தனைகளில் பல நன்மைகளைப் பெறுவார். ஓரளவு
பூமி இலாபம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கோசார குரு
- ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் பணியில் பதவி உயர்வுகளைப் பெறுவார். தொழிலில்
மதிப்பு மரியாதை, கௌரவம் உயரும். ஆனால், சனிக்கு 7 ஆம் இடத்தில் செவ்வாய் இருக்க கோசார
குரு சனியைக் கடக்கும் போது எதிரிகளின் தலையீட்டால், தடைகளால் ஜாதகருக்குக் கிடைக்க
வேண்டிய பதவி உயர்வில் தடைகள் ஏறபடும்.
சனி மற்றும்
சந்திரன் இணைந்து ஒரே இராசியில் இருக்க, கோசார குரு ஜனன ஜாதக சனி, சந்திரனைக் கடக்கும்
போது பணியிடத்தில் தன் பதவி உயர்வுக்காக பணச் செலவுகள் ஏற்படும். அப்படி பணம் செலவழிக்காமல்
பதவி உயர்வு பெற்றால் வேறு இடத்திற்கு இட மாறுதலோடு கிடைக்கும்.
ஜாதகியானால்,
அவள் ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் 180° யில் இருந்து ஜனன சனியை, கோசார குரு கடக்கும்
போது அவள் கணவன் அவளின் காமத்திற்கு அடிமையாவான். சனி,புதன் இணைவு இருந்து அதற்கு
180° யில் புதன் இருந்து, சனி, புதன் ஜாதக இணைவை கோசார குரு கடக்கும் போது அவளை மக்கள்
பலவழிகளிலும் தண்டிப்பர். அடிப்பர். பணி செய்யும் பெண்ணாயிருந்தால் அவள் வேலையில் முன்னேற்றங்கள்
இருக்கும். கோசார குரு ஜனன சனி மீது வரும்
போது பணியில் நல்ல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
கோசார சுக்கிரன்
- ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் பொருளாதார முன்னேற்றங்களை அடைவார். பொருளாதார
வகையில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள், விழாக்கள் கொண்டாட்டங்கள்
ஆகியவை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். கடன் நிலவரங்களும் கட்டுக்குள் இருக்கும்.
கோசார இராகு - ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது
ஜாதகர் தனது பணிகளில் கடமையை செய்ய முடியாத
அளவுக்கு தடைகளை எதிர் கொள்வார். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். புகைப்படக்
கலை, ஸ்கிரீன் பிரிண்டிங் போன்றவற்றில் ஆர்வம் ஏற்பட்டு அதையே தனது பொழுதுபோக்காகக்
கொள்வார். பூதம், பிசாசு, பேய் போன்ற அமானுஷ்ய முறைகளில் ஆவல் கொள்வார்.
கோசார கேது
- ஜனன ஜாதக சனியைக் கடக்கும் போது ஜாதகர் தொழிலில்,
வேலையில் பலவித இன்னல்களையும், காரணமில்லா தடைகளையும், அதிகாரிகளின் தொல்லைகளையும்,
வழக்கு விவகாரங்களையும் எதிர் நோக்குவார்.
இதன் காரணமாக ஜாதகர் தன் வேலையை விட்டுவிடக் கூட எண்ணுவார். செவ்வாயும், கேதுவும் சனியின
மீது வரும்போது, ஜனன ஜாதகத்தில் குரு, புதன்
மற்றும் சுக்கிரன் சனிக்கு 2 ஆம் வீட்டிலோ அல்லது 12 ஆம் வீட்டிலோ இருக்க ஜாதகர் நிச்சியமாக
வேலையை இழந்துவிடுவார்.
கோசார செவ்வாய்,
கேது மற்றும் சந்திரன் ஆகியோர் ஜனன ஜாதகத்தில் சனிக்கு 2 ஆம் இடத்தைக் கடக்கும்போது
ஜாதகர் பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை இழப்பார்.
அதுவே பெண்ணின்
ஜாதகமானால் கோசார செவ்வாய், கேதுவின் ஜனன ஜாதக சனியின் மீதான நகர்வு ஜாதகிக்கு வீட்டுக்கு
வெளியில் எதிரிகளின் தொந்திரவாலும், வீட்டுக்குள் கணவனின் தொந்திரவாலும் ஜாதகி கஷ்டங்களை
அனுபவிப்பார். கோசார சந்திரன், செவ்வாய், கேது இருவருடனும் ஜனன ஜாதக சனியை கடக்கும்
போது அவள் பிறரால் பழி சுமத்தப்பட்டு, தூற்றப்பட்டு,
குற்றமும் சாற்றப்படுவாள்.
ஜோதிடத்தில்
சனி கர்மகாரகன், தொழில் காரகன் என்ற புகழ்பெற்ற வாக்கியம் உண்டு. இந்த உலகமே கர்மாவை
சுற்றியே அல்லது கடமையைச் சுற்றியே சுழல்கிறது. இந்த பூமியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு
மனிதனும் சில முக்கிய கர்மாக்களை அல்லது கடமைகளைச் செய்யவே படைக்கப்பட்டுள்ளான். ஆணோ பெண்ணோ அவரவர்க்கு விதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட
பிரத்தியேகக் கடமைகளைச் செய்வதில் இருந்து எவரும் தப்பிக்க இயலாது. கர்மாதிபதியான சனியின்
தலைமைக்கு உட்பட்ட, அவனால் தீர்மானிக்கப்பட்ட மேற்சொன்ன கடமைகளை மற்ற கிரக இணைவுகள்
தரும் உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள், அது நல்லதோ, கெட்டதோ அனைத்துமே ஜாதகரின் ஜாதகத்தில்
இடம்பெற்றுள்ள கிரக அமைப்புகளைப் பொறுத்தே அமையும்.
துறவிகள், புனித
மகான்கள் மற்றும் சுவாமிகள் ஆகியோர் இந்த இகலோகத்தில் இருந்து முற்றும் துறந்து மோட்சத்தை
அடையும் விருப்பம் அவர்கள் உள்ளத்தில், எண்ணத்தில், மனதில் இருக்கும் வரை அவர்களும்
தங்களுக்கு விதிக்கப்பட்ட தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், புனஸ்காரங்கள்,
விழாக்கள், தியானம், நோன்புகள், பிராயச்சித்தங்கள் இன்னபிற கர்மாக்களை அல்லது கடமைகளை
கண்டிப்பாக, ஒழுங்கு முறையுடன் செய்யவேண்டிய நிலையில் இருப்பார்கள். இந்த கைங்கர்யங்களை
செய்ய நீருக்கு உரிய சந்திரன், வாயு அல்லது காற்றுக்கு காரகன் சனி ஆகியோரின் அனுகூலம்
அவர்களுக்கு வேண்டும். மனதை ஒருநிலையில் வைக்க உதவும் மனோகாரகன் சந்திரனின் ஒத்துழைப்பு
அவர்களுக்கு வேண்டும். அவர்கள் கடைப்பிடிக்கும் நோன்புகளை நிகழ்த்த தூய, புனிதமான,
சிறந்த இடங்கள் வேண்டும். அதற்கு பூமிக்கு உரிய இறைவியான பூதேவியின் அருள், கருணை,
ஆசிகள் அவர்களுக்கு வேண்டும். சூரியனின் வெப்பம், வருணனின் மழை, வாயுவின் காற்று ஆகியவற்றில்
இருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் அளவுக்கு நல்ல வசிப்பிடமும் அவர்களுக்கு அவசியமாகிறது.
தன் தினசரி பூஜைகளை, நோன்புகளை தடையின்றி நிறைவேற்ற குறைந்த பட்சம் ஒரு குகையேனும்
வேண்டும். எங்ஙனம் பணியாற்ற வேண்டும்? எப்படி பூஜா கைங்கரியங்களை செய்யவேண்டும்? கடைப்பிடிக்க
வேண்டிய நியமங்கள் என்ன ? - இவை அனைத்துமே இந்து மத நூல்களில் அவர்கள் செய்ய வேண்டிய
கடமைகளாக, கர்மாக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மேன்மையான, முக்கியத்துவம்
மிக்க தத்துவங்களை புனிதர் பரம பூஜ்ய ஶ்ரீமதானந்த தீர்த்த ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ மத்வாச்சாரிய
சுவாமிகள் தனது துவைத கிரந்தங்களில் விளக்கி அருளியுள்ளார்.
இதன் காரணமாகவே
பெரிய ஞானிகள் சன்யாசிகள், மத குருமார்கள் ஆகியோர், தங்களுக்கு உலக பந்தங்களைவிட்டு
மோட்சம் கிடைக்க விதிக்கப்பட்டிருக்கிறாதா? – என்ற கேள்வியை சிறந்த ஜோதிடர்களிடம் கேட்கத்
தவறுவதில்லை. இது எதைக் காட்டுகிறது என்றால், மெய்விளக்க கோட்பாடான, தெய்வீக ஜோதிடமானது
முனிவர்களையும், ஞானிகளையும், புனிதர்களையும் தன் ஆதிக்க வரம்புக்குள் கொண்டுவந்துள்ளது.
காரண காரியங்களுடன்
கூடிய, அனுபவம் மிக்க, செயல்பாடுகளாலான பரந்த உலகில் சனி கிரகம் ஜாதகரின் ஆயுளையும்,
கர்மாவையும் தீர்மானிக்கிறது. இதில் எந்த அளவுக்கு சனியுடன் இணையும் பிற கிரகங்களின்
ஒத்துழைப்பு ஜாதகரின் ஜாதக பலன்களை தீர்மானிக்கின்றன என்பதை ஜாதகத்தில் ஏற்படும் மூன்று
கிரக இணைவுகளுக்கான பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.