Showing posts with label அழகர் மலை. Show all posts
Showing posts with label அழகர் மலை. Show all posts

Monday, April 21, 2014

அழகு மலை , அழகர் மலை

அழகு மலை , அழகர் மலை


வாராரு, வாராரு அழகர் வா….ராரு…………….!

    கன்னிப்பருவத்திலே, காயா மலர்கள் தொடுத்துச் சூடிக் கொடுத்தாள் சுடர் கொடி. மார்கழித் துயில் எழுந்து, முப்பது அமுதத் தமிழ் மழைபொழிந்துஎன்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தனோடு உற்றோம்என்று ஆத்ம சமர்பணம் அடைந்தாள் ஆண்டாள். “ கற்பூரம் நாறுமோ ? கமலப் பூ நாறுமோ ?” என்று காதலால் ஏங்கினாள், அவள். கனாவிலேயேவாரணம் சூழ வலம் வந்துநாரணன் நம்பியை பாணிகிரகணமே செய்து கொண்டுவிட்டாள்.

    “ அப்பா, அவர் என்னை வரச்சொல்லிவிட்டார்என்று சொல்லி மணமகள் போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு, முத்துச் சிவிகையேறி திருவரங்கத்துப் புக்கத்திற்கே போனாள் அவள். அங்கே அரங்கனின் திருமார்பு சேர்ந்தாள் என்கிறது சம்மிரதாயக் கதை.

    காலஞ்சென்ற பேறிஞர் பி ஸ்ரீ அவர்களோ, கதை முடியவில்லை, அவள் மெய்ப்பொருள் கண்டு ஊர் திரும்பினாள் என்கிறார். என்ன மெய்ப்பொருள் கண்டாள், அரங்கத்திலே ? “ மானுட உடல்,பொந்தியுடன் வானுலகம் புக முடியாதுஎனக்கிற விஞ்ஞானத்தைத்தான் உணர்ந்தாள்.

    “என்னைக் கொண்டுபோய் பிருந்தாவனத்திலே விட்டுவிடுங்களேன், காளிங்க நர்த்தனம் நடந்த கரையிலே போட்டுவிடுங்களேன்என்று கண்ணீர் வடித்தாள் கோதை. “ பசுக்கள் பிழைக்க மழை தடுத்துக் குடைபிடித்தானே, கண்ணன்அந்த கோவர்தன மலைக்கடியில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்களேன்என்று கேவுகிறாள்.

    வழியிலே வருகிறது ஓர் ஊர். வழியிலே வந்ததா ? , அல்லது அந்திம காலத்தில் தந்தையுடன் அங்கு வசித்தாளா ? தெரியாதுஇங்கே அந்தச் சூடிக்கொடுத்த நாச்சியாரின் தந்தையின் அதிஷ்டானம் உள்ளது. தந்தை தன் கடைசிக் காலத்தைக் கழித்திருக்கிறார் என்றால், மகளும் அங்கேதானே கடைசிவரை வாழ்ந்திருக்க வேண்டும் ?

    இந்த ஊரிலோ கிளி கொஞ்சுகிறது. இயற்கை திருநடனம் புரிகிறது. மஞ்சும், மந்தியும் விருஷபாத்ரி மலைமேலே துள்ளிக் குதிக்கின்றன.

    காதலால் கசிந்துருகி, உடலும் உள்ளமும் சோர்ந்து கோதை இங்கே வந்ததும்,

செங்கட் கருமுகிலின் திருவுருப்போல மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள், தொடு பூஞ்சுனைகாள் ! சுனையில்
தங்கு செந்தாமரைகாள் ! எனக்கொருசரண்சாற்றுங்களேன்என வாய்விட்டுக் கதறியிருக்கிறாள்.

    அந்தமருதப் பொழிலணி மாலிருஞ்சோலைதான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, ஆனைகட்டிப் போரடித்த மதுரைக்கு அருகே உள்ள திருமாலிருஞ்சோலை எனும்  அழகர்கோவில் என வைணவம் பறைசாற்றுகிறது. எல்லாத் திருப்பதிகளுக்கும் இதுவே பிரதான க்ஷேத்திரம் என்று ஆழ்வார்கள் அறுதியிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். பன்னிரெண்டு ஆழ்வார்களும் அழகர்மலை அழகனைத் தரிசித்து மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.

    தீர்த்த யாத்திரையாகத் தருமபுத்திரர் இங்கே வந்ததாக மகாபாரதம் சொல்கிறது. அந்தக் காலத்திலே அழகர்மலைக்கு விருஷபாத்ரி என்று பெயர் வழங்கியதாம். அர்சுனன் தீர்த்த யாத்திரை வந்ததாக ஆக்னேய புராணத்தில் செய்தி இருக்கிறது. மதுரையை ஹாலாஸ்ய க்ஷேத்திரம் என்றும். அதற்கு வடக்கே இருக்கிறது இந்தசுந்தர்ராஜர்  எழுந்தருளியுள்ளவிருஷபாத்ரிஎன்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    “ திருமாலின் திருமேனியாகவேமக்கள் இந்த மலையை வணங்கியதாகக் குறிப்பிடுகிறது பரிபாடல். கடைச்சங்ககாலத்தில், விளங்கிய பாண்டியன் கடலுள் மாயந்த இளம்வழுதி எழுதிய இரு பாடல்கள் பரிபாடலிலும், மற்ற பாடல்கள் புறநானூற்றிலும் இடம்பெற்றுள்ளன. பரிபாடலில் இவன் திருமாலிருஞ்சோலையின் சிறப்பையும், அங்கே எழுந்தருளியுள்ள கண்ணபிரானபலதேவர் இருவரின் பெருமைகளையும் பாடிச் சிறப்பித்திருக்கிறான்.

    ‘ அந்தக் குன்றோ திருமலை ஒத்தது, தன்னைக் கண்டோருடைய மயக்கத்தைப் போக்கும் பெருமையுடையதுஎன்று தலைமீது தூக்கிக் கொண்டாடுகிற இளம்பெரு, வழுதி, ‘சென்றேனும், கண்டேனும், திசைநோக்கியேனும்அதை அனைவரும் குடும்பத்துடன்வழிபடுங்கள்என்று உலகோரை நோக்கிக் கூறுகிறான்.

    இந்த ஊர் திருமாலைத் தரிசித்து வந்த அந்தணன் எதிரே மதுரைக்கு வந்துகொண்டிருந்த கோவலன்கண்ணகிகவுந்தியடிகளிடம், இம் மலை பற்றிய செய்திகளை உரைத்ததாக சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இடது பக்கமாக உள்ள காட்டின் வழியாகச் சென்றால், திருமால் குன்றத்தை அடைவீர்கள். அங்கே ஒரு சுரங்கவழி உள்ளது. அந்த வழியில் புண்ணிய சிரவணம், பவகாரணி, இடசித்தி என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. மலையை மும்முறை வலம் வந்து, சிலம்பாற்றங் கரையிலுள்ள பெண் தெய்வம்இம்மைக்கும், மறுமைக்கும், இம்மை மறுமை இரண்டிற்கும் அன்றி எக்காலத்திற்கும்பேரின்பம் தருவது எது ? எனக் கேட்கும் கேள்விக்கு விடையளித்தால், அங்குள்ள சுரங்கப் பாதையைத் திறந்துவிடும். அதன் வழியாகச்சென்றால் அங்கே இரட்டைக் கதவுடைய வாசலில் நிற்கும் தெய்வமானதுஅழியாத இன்பமேது ? – எனக் கேட்கும், அதற்கும் சரியான பதில் அளிக்க அந்தப் பெண்தெய்வமே, முன் கண்ட மூன்று தீர்த்தங்களுக்கு அழைத்துச் செல்லும். பிறகு அவற்றில் நீராடி, திருமாலின் கருடக்கொடி மரத்தை தரிசித்துப் பிறவிப் பிணியறுத்து மதுரைக்குச் செல்லலாம்என அந்தணன் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகு பெருமைகளைக் கொண்ட, திருமாலிருஞ்சோலை எனும் அழகர்மலை, மதுரைக்கு வடக்கே  25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மலையடிவாரத்தில் பிரம்மாண்டமான கோட்டைச் சுவர் சூழ மிகப்பெரிய கோவிலில் கள்ளழகர் எனும் திருமால் குடிகொண்டிருக்கிறார்.  

    அழகர்மலைக்கு உத்யான சைனம், சோலைமலை, மாலிரும் குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி, இடபகிரி என்றெல்லாம் முன்பு பெயர்கள் வழங்கியதுண்டு. குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நீலமலை எனப் பெரியாழ்வார்  பலபெயர்களில் அழைக்கிறார். மற்ற மலைகளொடு ஒப்பிடும்போது, அவை பசுவைப் போலவும், இது காளையைப் போலவும் காட்சியளிப்பதால் விருஷபாத்ரி எனப் பெயர் பெற்றதாக சூதரிஷி விவரிக்கிறார். மலைச் சிகரத்திலே நாராயணனுடைய பாதச் சிலம்பிலிருந்து பெருகி வருவதே சிலம்பாறு ஆகும். இச் சிலம்பாறு கங்கையைவிடப் புனிதமானது. இங்குதான் மலையத்துவஜன், மகன் சந்திர கேதுவிடம் இராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு, சுந்தர்ராஜரை தரிசித்து, துறவு மேற்கொண்டு, முக்தியடைந்தானாம்.

    சந்திரகேதுவின் மகன் குப்த பாண்டியன், குழந்தைக்காக அழகரை வேண்ட, அவன் தவத்தை மெச்சிபார்வதியே உனக்கு மகளாகப் பிறப்பாள்என்று வரம் தந்தாராம் இறைவன். அப்படிப் பிறந்தவளே தடாதகைப் பிராட்டி எனும் மதுரை மீனாட்சி அம்மை.

   கிழக்குமேற்காக பத்து மைல் நீளத்தில், ஆயிரம் அடி உயரமுமாகப் படுத்துக்கிடக்கிறது இப் பெரியமலை.  இக்கோயில், கோட்டைகளை பாண்டியருக்குப் பிறகு வந்த நாயக்க வம்சத்தினர் பேணிப் பாதுகாத்தனர்.

   இக்கோவில் இரண்டு கோட்டைகளுக்குள் உள்ளது. உள்ளே நுழைந்ததும் இன்னுமொரு மதில் தெரியும் அதனுள் அழகரின் அழகிய கோபுரம் தெரியும். கோவில் உள்ள இதுதான் இராவணன்கோட்டை, வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டையாகும். இராவணன் கோட்டைக்கு, இரண்யன் வாசல் மற்றும் இராயகோபுர வாசல் என இரு வாசல்கள் உள்ளன. இராயகோபுரம் பாதி கூட எழாமல் சிதைந்து நிற்கிறது.

    அதை ஒட்டிச்செல்வதே மலைக்குச் செல்லும் வழி, தேவஸ்தான மினி பஸ்கள் பழமுதிர்ச் சோலை முருகன்கோவில் வரைசெல்கின்றன. மேலே, நூபுரகங்கை வரை இச் சாலை நீள்கிறது. நூறு படிகள் ஏறிச்சென்றால் ரம்யமான ராக்காயி அம்மன் கோவில் உள்ளது. அதுதான் மாதவி மண்டபம். படி நெடுக வானரங்களின் வாலாட்டம்தான். இந்த அழகினை, நான் கவிதையாக வடித்தபோது---      

இயற்கையெழில் கொஞ்சுமந்த அழகர் மலைசென்றால்,
இதயமதில் யின்பம் பொங்கும், அழகு நெஞ்சையள்ளும்
மலையடியிற் நிற்குமெழில் மாலவனின் கோவில்,
மலைமேலே முருகனுக்குக் கோவிலுண்டு காவில்.
 
  வளைந்து மலையிற் செல்லுகின்ற, வனப்புமிக்கப் பாதை,
  வனக் குயில்கள் பாடுமிசை வந்து சேரும் காதை
  வழி யெங்கும் வானரங்கள் தாவித்தாவி ஓடும்,
  வரும் பக்தர் கைப்பொருளைப் பறித்தே விளையாடும்.

  தாயான ராக்காயி அம்மன் புகழ் பாடி,
  தூயவளின் துணைதேடி வருவாரே ஓடி,
  நூபுர கங்கையெனும் சுனைத் தீர்த்தமாடி,
  நோய்நொடிகள் தீருகின்ற பக்தர் பலகோடி.

  மாலவனின் அருள்வெள்ளம் மலையடியில் ஓடும்,
  வேலவனின் அருள் உள்ளம் சோலையிலே கூடும்,
  இயற்கையன்னை யெழில்மனமோ என்றும் கூத்தாடும்,
  இவற்றையெலாம் காணும் உள்ளம் இன்பத்தால் பாடும்.”

    மாதவி மண்டபத்தின் நடுவிலுள்ள வெற்றிடத்தில்தான் நாழிக்கிணறு பொன்ற அமைப்பு உள்ளது. அதனருகே கோமுகி வழியாகவும் நூபுர கங்கையின் புனித நீர் வருகிறது. இதிலும் பக்தர்கள் குளித்து, பாவம் போக்கிப் பரவசமடைகின்றனர். மாதவி மண்டபத்தில்தான் சோலைமலையின் அதிதேவதையான இராக்காயி அம்மன் வீற்றிருக்கிறாள். இவள் ஆங்கிரஸ முனிவரின் மகள் என்கின்றனர். மலைக்கு வரும் வழியிலேயே அனுமார், கருடன் ஆகியோரின் தீர்த்தமும், கோவிலும் உள்ளன. பாண்டவ தீர்த்தமும் கொவிலும் இருக்கிறது. இக்கோவிலில் தோசைப் பிரசாதம் பிரசத்திபெற்றதாகும்.

    மலைக்குச் செல்லும் வழிக்குப் பக்கவாட்டில் இருக்கும் நந்தவனத்தில்தான் ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரின் அதிஷ்டான மண்டபம் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. வடக்குப் பிரகாரத்தில் ஆண்டாளின் சந்நிதி உள்ளது. பங்குனி மாதத்தில் கள்ளழகர் திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். ஐந்து நாள் உற்சவம். ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி, ஸ்ரீஆண்டாள் ஆகிய நால்வருடனும் திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார் அழகர்.

    இராவணன் வாசல் வழியாக உள்ளே நுழைகிறோம். அங்கே பதினெட்டாம்படி கருப்பண்ணசாமியை தரிசிக்கிறோம். அங்கிருக்கும் கதவுகளைத்தான் கருப்பண்ண சாமியாக பாவித்து, பூஜைகள் நடக்கின்றன. இவர் கள்ளர் இன மக்களின் குலதெய்வம், அழகர்கோவிலுக்குக் காவல்தெய்வம் ஆவார். நெல்லைச் சீமையை அடக்கிவிட்டு வெற்றிக் களிப்போடு வந்த ஆங்கிலேய தளபதி ஹீராவின் படை, இந்த மாவீரர்களிடம் மாட்டிக்கொண்டு படாதபாடுபட்டு புறமுதுகுகாட்டி ஓடியதாக வரலாறு உண்டு. பதினெட்டாம்படி இவர்களுக்குச் சத்தியப் படியாகும். இங்கு பொய்ச் சத்தியம் செய்தால் கருப்பண்ணசாமி பழிவாங்கிவிடுவார் என நம்புகின்றனர்.

    அழகர் சித்திரையில் மீனாட்சி திருமணத்திற்குச் செல்லுமுன் அவர் அணிந்திருக்கும் நகைப் பட்டியலை கருப்பண்ணசாமியிடம் படித்துக் காட்டியும் ,அதேபோல் திருவிழா முடிந்து திரும்பும்போது சரிபார்ப்பதும் கருப்பண்ணசாமியே ஆவார்.

    கருப்பண்ணசாமியை வணங்கி விட்டு வண்டிவாசல் வழியாக உள் நுழைந்துயதிராஜன் முற்றத்தைக் கடந்து கோடைத்திருநாள் மண்டபத்தைத் தாண்டி மேற்கே மணவாள மாமுனிகள், உடையவர், திருக்கச்சி நம்பி ஆகியோரின் சந்நிதிகளை தரிசிக்கிறோம்பின் தொண்டைமான் வாசல் வழியாக உள்ளே நுழைந்து, தங்கக் கொடி மரத்தை வணங்குகிறோம். அடுத்து ஆயிரங்கால் மண்டபம், இங்கேயுள்ள யாளிகளின் வாய்க்குள் கற்கள் உருளுகின்றன.

    அடுத்து, சூரியன் வாசல் வழியாக இரண்டாம் பிரகாரம் அடைந்து மூல ஸ்தானத்துக்கு மேலுள்ள சோமகந்த விமானத்தைத் தரிசிக்கிறோம். பின், துவார பாலகர்களைத் தாண்டி மூலவர் சந்நிதி அடைகிறோம்.  

    மூலவருக்கு ஸ்ரீ பரமஸ்வாமி என்று பெயர். பஞ்சாயதங்களுடனும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக, கம்பீர புருஷராகக் காட்சியளிக்கிறார். அவர் கையிலிருக்கும் சக்ராயுதம் புறப்படத் தாயாராக இருப்பது போல் காட்சியளிக்கிறது. இதேபோல் வேறெங்கும் இல்லை என அர்ச்சகர் குறிப்பிடுகிறார். உற்சவரோ பிரசித்திபெற்ற அழகர். பின்னர் கல்யாண சுந்தரவல்லித் தாயார், ஆண்டாள் சந்நிதி மற்றும் பரிவார தேவதைகளைத்  தரிசித்து வெளிவருகிறோம்.

    சுதர்சனருக்கு தனி சந்நிதியே இருக்கிறது. பதினாறு கைகளிலும் பதினாறு வகை ஆதங்களேந்தி, மூன்று கண்களிலும் கனல்தெரிக்க, பயங்கரமான நீண்ட பற்களையுடைய இவர், ஷட்கோண யந்திரத்தின் மீது இருக்கிறார். பின்புறம் நரசிம்மர் காட்சியளிக்கிறார். விஷவக்சேனர், பைரவர் சந்நிதிகளும் உண்டு.

    திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகருக்கு உரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாளாகும். திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மதுரை மீனாட்சி திருவிழா மாசிமாதத்திலும், அழகர் திருவிழா சித்திரையிலும் நடந்துவந்தன. இந்த இரு திருவிழாக்களையும் ஒரே மாதத்தில் நடக்க வைத்தவர் நாயக்க மன்னனே.

    மதுரை மக்கள்  எதிர்கொண்டு அவரை வரவேற்பதைத்தான் கள்ளழகர் எதிர்சேவை எனப்படுகிறது. இரவு முழுக்க மக்கள் வெள்ளத்தில் நீந்தி, காலை குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருளி பக்தகோடிகளுக்குப் பரவச காட்சியளித்து மகிழவைக்கிறார். வைகைக் கரை வழியாகவே வண்டியூர் சென்று இரவு தங்கி, காலையில் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சமளிப்பார். அன்றிரவு  இராமராயர் மணடகப்படியில் தசாவதார சேவையில் காட்சியளித்து, பிறகு ஆனந்த ராயர் பல்லக்கில் இராஜாங்கக் கோலத்தில் புறப்பட்டு மைசூர் மண்டபத்திற்கு வந்து அங்கே திரும்ப கள்ளழகர் கோலத்திற்கு மாறி புஷ்பப் பல்லக்கில் சேவை சாதித்துவிட்டு மறுநாள் அப்பன் திருப்பதி வழியாக சோலைமலையை அடைவார்.

    அவர் ஆற்றிலே இருக்கும் மூன்று நாட்களும், இரவு பகல் பாராமல் மதுரை விழாக்கோலம் பூணும். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து பக்தி வெள்ளத்தில் மிதந்து தங்கள் பிறவிப் பயனை அடைவர் என்றால் மிகையாகாது.


ஜோதிட கலாநிதிஎஸ், விஜயநரசிம்மன். எம். எஸ்ஸி. (அப்ளைடு அஸ்ட்ராலஜி).

செல் – 94888 62923, 9789101742.