Wednesday, October 31, 2012


உயர்வைத்தா,முருகா !



 வண்ண மயிலேறி நிற்கும் வள்ளி நாயகா !

 உன்னை யெண்ணி வந்தோமே, உயர்வைத்தா,முருகா !


 எண்ண,எண்ண நெஞ்சினிக்கும் உன்னை யெண்ணும் போது ,

கண்ணில் வந்து நிற்கு மந்த காட்சிக் கிணையேது ;

 பண்ணோடு பாடுமிசைப் பாட்டை நீயும் கேட்டு ,

 எண்ணிலாத யின்பந்தந்தே,மகிழ்வை நீயும் கூட்டு.


 பாவநதி கடக்க வொரு பாலமென ஆவாய் ,

 ஜீவநதி கடக்க உந்தன் நேசக்கரம் நீட்டு ;

 காலமெலாம் மண்ணில் வாழ வேண்டேனே சுமையாய் ,

 காத்திடவா,கந்தா நீ,கண்ணைக் காக்கு மிமையாய்.

Thursday, October 25, 2012




அருள் புரிவாய் அன்னையே !





பொற்றாமரைக் குளத்திற் நீராடினேன் – உன்
பொன்முகத்தைக் கண்டு தினம் துணை நாடினேன் ;
நற்றாள் பணிந்து தினம் நலம் வேண்டினேன் ,
நம்பிவந்த யெனைக்காத்து அருள்வாயம்மா !
                                       ( பொற்றாமரை )
வற்றாத வைகையென வளந்தருவாயா ? – பெற்ற
நற் தாயெனப் பேணி யெனை வளர்ப்பாயா ? – உற்ற
துயர்நீக்கித் துணையாக யெனைக் காத்திருப்பாயா ? – கற்ற
நற்றமிழிற், நான் பாட அருள்புரிவாயா ?
                                        ( பொற்றாமரை )
சொக்கி நின்ற நாதனுக்கு உன் கரந்தந்தாய் – அவன்
பக்கம் நின்று, பக்தருக்கு நல்லரு ளீந்தாய் – தினம்
மக்கள் வெள்ள முனைச் சூழ்ந்து,கோவிலில் ஆட – எட்டு
திக்கி னின்றும் வந்தவர்வாய் , உன் புகழ் பாட
                                        ( பொற்றாமரை )


உன் னெழிற் கோலம் !


கோலங்கண்டு மயங்கார் யாருளரோ ? – உன்னெழிற்
கோலங்கண்டு மயங்கார் யாருளரோ ?

குறுநகை யெழில் சிந்தி, கொஞ்சுங்கிளி கையேந்தி ,
கொண்டைதனில் மலர்சூடி,கெண்டைவிழிக் கவிபாடி ;
குங்குமக் கோலம் மின்ன, கூடலில் நின்ற யெழிற்
                                          ( கோலங்கண்டு )
காலமெலாம் பணிந்து, கனிந்து மனமுருகி ,
ஞாலமெலாம் புகழை , பாடி யுனைப் பரவி ;
வேலான விழியழகை வியந்து அதில் மயங்கி ,
பாலான வெண் மதியாய் பளிச்சிடும் இளம் யெழிற்
                                         ( கோலங்கண்டு )
                                    

Monday, October 22, 2012







அருள் தருவாய் குருவே !


கருணை கொஞ்சம் நெஞ்சிலிருந்தாற் காத்தருள்வாய்,குருவே !
அருளை வேண்டு மன்பர்க்கு நீ, யருள்தருவாய்,குருவே !
                                                    (கருணை)
நம்பிவரும் அடியார்க் கென்றும் நலஞ்செயவே வேண்டும் - உனை
நாடிவரும் அவர்குறையோ , ஓடி மறைய வேண்டும் – தினம்
பாடிவரும் பக்தருக்கு நின்,பதமலரொளி வேண்டும் - துணை
தேடிவரும் அவர்க்கு யென்றும்,உன் திருவருளே வேண்டும்.
                                                    (கருணை )
இதயமதி லுன்னை வைத்து , யென்று மேற்று மன்பர் – உன்
பதமலரைப் பணிய அருள் பெருகிவிடு மென்பர் - நல்
இதயமலர்,மலர அதிற் யின்ப மென்றும் பொங்க - அதில்
உதயமாகும் வொளிமிகுந்த,உயர்ந்த வாழ்வு தங்க.
                                                     (கருணை)


Saturday, October 20, 2012



கோலமயில் வாகனனே !

 ( மங்கையரில் மஹராணி -மெட்டு )


கோலமயில் வாகனனே கொஞ்சுமொழி மோகனனே !
இன்பத்தமிழ் நாயகனே யென்னுயிரே வேலவனே !
                                    (கோலமயில்)
ஓராறு  முகமும், ஈராறு கண்ணும்,
கையோடு வேலும் , யெனைக் காக்க வேண்டும் ;
வேலா உன் ஆடல்,நீ யாடப் பார்த்து ,
நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு ;
வெள்ளி ரதத்திற் துள்ளி யெழுந்து,வேலா நீ வாராய் ,
உன் னன்புக் கைதன்னால், நீயும் அருள்தாராய் !
                                   ( கோலமயில் )
மாணிக்கத் தேரில் , மன்னவ னுன்னை ,
மங்கையரோடு, நான் காண வேண்டும் ;
தீராத துன்பம் கோடானுகோடி ,
போராடுகின்றேன்,வேலாதிவேலா !
துன்பந் தீர்த்துத் துணையாய் நிற்கத் தலைவா நீ வாராய் !
இன்பத்தை யெந்நாளு மெந்தன் யிறைவா நீ தாராய் !
                                                                                  ( கோலமயில்)






குருவென்று கூறாத நாளெல்லாம் பாழே !


திருநாமம் சொல்லாத வொருநாளும் வீணே ,
குருவென்று கூறாத நாளெல்லாம் பாழே !
                                  (திருநாமம் )
நெருங்காது துயர் நம்மை , நினைத்தென்றும் வாழ்ந்தால் ,
ஒரு நாளும் மறவாது , தியானத்தில் ஆழ்ந்தால் ,
                                  ( திருநாமம் )
கரும்பாக யினிக்கின்ற அவன் பேரைச் சொன்னால் ,
அரும்பான நம் வாழ்வு , அழகாக மலரும் ;
கருகாது யென்றென்று மெழிலாகத் திகழும் ,
சருகாக மாறாது , மணமென்றுங் கமழும் .
                                  ( திருநாமம் )



Tuesday, October 16, 2012




நினைக்க நினைக்க இனிக்குதடா !


நினைக்க நினைக்க இனிக்குதடா உந்தன் நெஞ்சம்,
நின் னடியில் நாங்களுமே யென்றுமே தஞ்சம்.

கோலமயில் மீதமர்ந்து வாராய் கொஞ்சம் – ஒரு
கோவிலாகும்,ஆண்டவனே யெங்கள் நெஞ்சம்.
                                         ( நினைக்க )
அஞ்சுகின்ற போதினிலே,வேல் முன் தோன்றும் – துயர்
மிஞ்சுகின்ற போதினிலே, உன் கால் தோன்றும்.
                                          ( நினைக்க )
துதிப்போர்க்கு யென்றுமினித் துயரம் யில்லை – உனை
மதிப்போரே, உன் மடியிற் வளரும் பிள்ளை.
                                         ( நினைக்க )

Monday, October 15, 2012



ஓ ராகவேந்திரா !





ஒருநாளு முனை மறவேன்,ஓ ராகவேந்திரா !
கருணையிலையோ ? காலமெலாந் தொல்லையோ ?
                                        (ஒரு நாளும்)
திருவடியைத் தொழுதேனே ! தினமும் உன்முன் அழுதேனே !
வருந்துயர்  நீக்காது  வாளா  திருப்ப  தென்ன ?
                                        (ஒரு நாளும்)
கருணைக் கடலென்றே, காலடியில் வீழ்ந்தேனே ,
வருந்துயர் போமென்றே , வண்ண முகங்கண்டேனே  ;
இருந்து மென்ன பயன் , யிருகரங் கூப்பியே ,
இறைவா வுன் இணையடியிற் , மலர்தூவி யுனை வணங்கி ,
                                        (ஒரு நாளும்)