Tuesday, September 18, 2012






பூஜித்தேன் அருள்வாயே ராகவேந்திரா !




நித்தமுனை நினைக்கின்றேன் ராகவேந்திரா -– மன
நிம்மதியை   ஈந்திடுவாய்    ராகவேந்திரா ;
புத்தம்புது     மலராலே      ராகவேந்திரா -- நான்
பூஜித்தே      னருள்வாயே   ராகவேந்திரா ;

பக்தியுடன்    பாடுகிறேன்    ராகவேந்திரா -– நற்
சக்திதந்து     நலமஞ்சேர்    ராகவேந்திரா ;
எக்கதியை    யடைந்தாலும்  ராகவேந்திரா -– நீ
பக்கத்துணை  யாயிருப்பாய்  ராகவேந்திரா ;

துயர்நீக்கி,    உயர்வுந்தா    ராகவேந்திரா -– அன்புப்
பயிர்வளர    நீராவாய்      ராகவேந்திரா ;
செயற்கரிய   செய்பவனே   ராகவேந்திரா -– தினஞ்
செயமளித்துச் சிறப்புந்தா    ராகவேந்திரா .




கோவிந்தன் நாமத்தைப் பாடு; !


கோவிந்தன் நாமத்தைப் பாடு;-- எழிற்
கோலத்தைக் கண்ணாறக் காணு ;
பாதத்திற் புதுமலரைத் தூவு ,
பரந்தாம னருள் பெற்று வாழு .


திருக்கூடல்  மாநகரில் அமர்ந்திருக் குந்தேவன் ,
திருமலையி லெழிலுருவாய் நின்றிருக்கும் நாதன் ;
அருள்பெற்று வாழ்ந்திடவே யல்லலேது மில்லை,
இருள்நீக்கி யொளிசேர்ப்பான், இனியேது தொல்லை.
                                           (கோவிந்தன்)
நம்பியவர் குறைநீக்கி நலம்பலவே தருவான் ,
நாடியவர் துயர்போக்க, நாரணனும் வருவான் ;
பாடுபவர் பயம்நீக்கப் பார்த்தனுமே வருவான் ,
தேடுபவர் தினங்காணத் திருவருளுந் தருவான் .
                                           (கோவிந்தன்)



Saturday, September 15, 2012






          சாந்தி நிலவ வேண்டும்...!



சாந்தி நிலவ வேண்டும் எங்கும்
சாந்தி நிலவ வேண்டும்
                          ( சாந்தி நிலவ )
காந்தி மகாத்மா கட்டளை யதுவே
கருணை யொற்றுமை கதிரொளி பரவி,
                          ( சாந்தி நிலவ )
கொடுமைசெய் தீயோர் மனமது திருந்த
        நற்குண மது புகட்டிடுவோம்
மடமை யச்சம் அறுப்போம் மக்களின்
        மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்.
                          ( சாந்தி நிலவ )
திருடம் தரும் அஹிம்சா யோகி நம் தந்தை
        ஆத்மா னந்தம் பெறவே
கடமை மறவோம்,அவர் கடன் தீர்ப்போம்
        களங்கமில் அறம் வளர்ப்போம்.
      (எங்கும் சாந்திநிலவ வேணடும் )
எங்கும் சாந்தி ! எங்கும் சாந்தி ! எங்கும் சாந்தி..........


 கர்நாடக தமிழிசை மேடைகளில் கடந்த நூறு ஆண்டுகளுக்கும்
மேலாக இசைக்கப்பட்டு வரும் இப்பாடலை எழுதியவர் எனது
தந்தை திரு. எட்டயபுரம் எஸ். சேதுமாதவ ராவ் ஆவார்.
ஆதி தாளம் திலங் ராகத்தில் அமைந்த இப் பாடல்
இன்றைய மேடைகளிலும் புகழுடன் திகழுகிறது. ஒவ்வொரு
காந்தி ஜெயந்தியன்றும் ஒலி,ஒளி பரப்பாகும் இப் பாடல்.
                                        இளசை விஜயன்


முத்துக்குமரா வென கத்துங் கடலே !



முத்துக்குமரா வென்று கத்துங்கடலே அந்த
சத்தங்கேட்டு,சண்முகனைக் கூவும் மயிலே,
செந்திலதிபா வென்று சேவற் கூவுமே உனை
சிந்திக்கின்ற பக்தருள்ளம் மெய்மறக்குமே.

தித்திக்கின்றதே,நாவும் தித்திக்கின்றதே உனை
பக்தியோடு போற்றிப் போற்றி பாடும் போதிலே,
சக்திவந்ததே புது சக்திவந்ததெ நாளும்
சண்முகனே, பொன்னடியைத் தேடும் போதிலே

என்றுமின்பமே நெஞ்சிலென்று மின்பமே வொரு
கன்றினைப் போற் தாயினருட் பாலருந்தவே,
குன்றவில்லையே யின்பங் குன்றவில்லையே அந்த
குன்றிலாடுங் குமரன் குரல் கேட்குஞ் செவிக்கே.



முருகா,வருக !




வெற்றி வேலெடுத்து நீ வேகமாக வருக,
நெற்றி யொற்றை கண்ணன் பெற்ற செல்வமே,
முருகா வருக ! வருக முருகா !

அன்புமுகங் கண்டாலென் அல்லல்தீரும் முருகா,
அழகுவேலைக் கண்டாலென் அச்சந்தீரும் முருகா.
குன்றமர்ந்த குருபரனே ! குறத்தி மணவாளா,
நின்றுயெம்மைக் காக்கவே நித்தம் நீ வருக.
                                      (வெற்றி)
இதயமெனும் மலரெடுத்து யிணையடியிற் வைத்தேன்,
இன்பமிகு வாழ்வைப்பெற யென்றுமே துதித்தேன்,
சரவணனே ! ஷண்முகனே , சக்திவடிவேலா,
கரங்கொடுத்துக் காக்கவே கந்தா நீ வருக.
                                      (வெற்றி)
நீலமயில் மீதேறி நீ வருவாய் முருகா,
காலமெலா முனக்காகக் காத்திருப்பேன் முருகா,
ஆலகால விஷமுண்டோன்,அம்மையப்பன் பாலா,
வேலுடனே வினைதீர்க்க வருவாய் நீ வேலா !
                                     (வெற்றி).

Friday, September 14, 2012

பாதை மாறும் மனிதா ......





பாதை மாறும் மனிதா ......




போதையாலே பாதை மாறும் மனிதா !
போதனைகள் உந்தன் காதில் விழுமா ?
கடன் வாங்கி,சலிக்காமற் குடிப்பாய்,
காசையெல்லாம் நீராக்கிக் களிப்பாய்,
வீடிழந்து,வீதியிலே விரக்தியில் நிற்பாய்
காடு,வீடு எல்லாமே கடனாலே, விற்பாய்
சாதனைகள் நீ செய்ய மனதாலே நினைத்தால்,
வேதனைகள் வரிசைகட்டி வாசலிலே நிற்கும்,
மனைவிமக்கள் மகிழ்ச்சியெலாம் மண்ணாகிப் போகும்,
மாறிவிட்டால் வாழ்க்கையெலாம் பொன்னாக  மாறும்,
மதுவை நீ மறந்தால் மாறும் உன் தரித்திரமே,
மறந்தால்  படைப்பாய்  நீ  மாறா சரித்திரமே!
பாதை மாற வேண்டுமெனில் போதை மாறவேண்டும்,
போதனைகள் ஏற்று,இப் புவியில் வாழ்ந்து காட்டு.

Thursday, September 13, 2012

அன்றும்...............இன்றும்








                                    அன்றும்...............இன்றும்





தந்தை சொல்லைக் கேட்டு ராமன் நடந்தானே யன்று,
தந்தை சொல்லைக் கேட்டு யாரோ நடக்கின்றா ரின்று?
காலம் மாறிப்போச்சு யின்று கோலம் மாறிப்போச்சு.
மூலம் மாறிப்போச்சு யின்று முடிவும் மாறிப்போச்சு.

அன்புதந் தரவணைத்தார் அன்னை தந்தை யன்று,
அதைமறந் தவரைச்சேர்த்தாய் காப்பகத்தி லின்று:
உனைப்பெற்ற தந்தைதாய்க்கு என்னசெய்தா யின்று ?
மனைவிமக்கள் நலத்தைமட்டும் மறக்கவில்லை யென்றும்.!

நீண்டமடலும் நெஞ்சுக்குள்ளே அமைதி தந்த தன்று,
குறுஞ்செய்தியோ வந்ததுபோற் மறைந்து போன தின்று,
கண்முன்னே கடிதம் வரைந்தவர் கனிவு முகந் தெரியும்
கண்ணைவிட்டே  மறைந்துபோவார் குறுஞ்செய்தி யன்பர்.

பண்போடுண்மைக் காதல்செய்தார்,பாங்குடனே யன்று
கண்ணோடுபொய்க் காதல்செய்தார் காளையரு மின்று.
மனமிணைந்து செய்தகாதல் மாலைகண்ட தன்று,
காமத்தாலே கனிந்தகாதல்  கரைந்துபோன தின்று.

கூர்மதியாற், தியாகத்தாலே யின்னுயிர் தந்தா ரின்று,
பாரேபோற்றும் பாரதத்தாயின் விலங்க றுத்தா ரன்று,
ஊரையேய்த்து ஊழல்செய்து, கொள்ளையடித்தா ரின்று
பாரேசிரிக்க பாரதத்தின் பேரைக் கெடுத்தா ரின்று.

அன்றுபோலே யின்று நாமும் அப்பன் பேச்சைக் கேட்போம்,
அன்னைதந்தை யவர்நலனை அக்கறையோடு காப்போம்,
பண்புடனே காதல்செய்து பாசந்தன்னைப் பொழிவோம்,
கண்ணைப்போலே பாரதத்தை கண்ணுங்கருத்தாய்க் காப்போம்.

                                               ----- இளசை விஜயன்