Wednesday, September 12, 2012











காலமெல்லாம் காதல் வாழ்க !


மண்ணிற் பிறந்து
தவழும் போது
மண்ணின் மீது காதல்.

சிறிது வளர்ந்து
சிந்திக்கும்போது
தந்தை மீது காதல்.

நான்கு பேரோடு
பழகும்போது
நண்பன் மீது காதல்.

எண்ணு மெழுத்தும்
கற்கும் போது
ஆசான் மீது காதல்.

கடைக்கண்ணாலே
கவிழ்க்கு மந்த
கன்னியின் மீது காதல்.

கன்னி தந்த,இனிய
கட்டிக்கரும்பாம்
மழலை மீது காதல்.

அன்பு,பாசம்,பக்தி
நேசம், அனைத்துந்தந்த
ஆண்டவன் மீது காதல்.

அதனினும்,அல்லல் பட்டு
நம்மையீன்ற அன்னையின்மீதோ
ஆயுள் முழுக்கக் காதல்,

எனவே,காலமெல்லாம்
காதல் வாழ்க !

செந்தில் நாயகனே


செந்தில் நாயகனே 



அறுபடை வீட்டை,
யாளும் மரசே
அருள்தர வாராய் நீ,
ஒருமுறை வந்து
உன்னருள் தந்து
காத்தருள் கந்தா நீ.

நலமது நாடி
குலமது வாழகுமரா
யுனைத் தொழுதோம்,
பலமுறை யெங்கள்
குறைகளைச் சொல்லி
பதத்தினிலே யழுதோம்,
மறைதனை யிறைவனுக்
குரைத்த நற் சிறுவனே,
செந்தமிழ் நாயகனே,
நிறைமதி முகமதை
நீயுமே காட்டிடு
நீலமயிலோனே.!

நாவினிலே வந்த,
பாவினிலே பா
மாலையுந் தொடுத்தோமே
கூவியழைத்தோம்
குமரா வென்று
குகனே வாராய் நீ.
பாவி யிழைத்த
பாவங்குறைத்து
பதமலர் தாராய் நீ
தேவியருடனே,
திருமுகங் காட்டு
செந்தில் நாயகனே !








அழகர்மலை அழகு, நெஞ்சையள்ளும் !

இயற்கையெழில் கொஞ்சுமந்த அழகர்மலை சென்றால்
இதயமதில் யின்பம்பொங்கும், அழகு நெஞ்சை யள்ளும்
மலையடியிற் நிற்குமெழில் மாலவனின் கோவில்
மலைமெலே மருகனுக்கும் கோவிலுண்டு காவில்.

வளைந்துசெல்லும் மலைமீது வனப்புமிக்க பாதை,
வனக்குயில்கள் பாடுமிசை வந்துசேரு ங்காதை
வானரங்கள் வழிநெடுகத் தாவித் தாவி யோடும்
வரும்பக்தர் கைப்பொருளைப் பறித்தே விளையாடும்

அழகுத்தாய் ராக்காயம்மா அரும்புகழைப் பாடி
அன்புருவான அவள்கரத்தின் நல்லருளை நாடி
நூபுரகங்கையெனும் நற்சுனைத்தீர்த்தம் ஆடி,
நோய்தீர்ந்து மனமகிழ்வார் பக்தர் பலகோடி .

மாலவனி னருள் வெள்ளம் மலையடியி லோடும்
வேலவனி னருளுள்ளம்  சோலையிலே கூடும்
இயற்கையன்னை யெழில்மட்டு மெங்குங் கூத்தாடும்
இனிய யெழில் காணுமுள்ள மின்பத்தாற் பாடும்.

                                           -இளசை விஜயன்

தாயுள்ளம்






 தாயுள்ளம்

ஆயிர(ம்) உறவுகள் வந்தாலும்,அன்னையைப் போலாகுமா ?
நோயினிற் நாம் படுக்க-கண்-நொடிப்பொழுதும் துஞ்சாமல்,
பாயினிற் படுத்து வாடும் நம் பக்கத்திற் பரிதவித்து,
வாயினிற் மருந்தூற்றி,வருத்தத்தை மனஞ்சுமக்க
கோயிற் பலசென்று குலதெய்வம் வேண்டி நிற்கும்
தாயின் கருணையுள்ளம் தரணியில் யாருக்குண்டு ?

உச்சிமுகர்ந்து,உரிமையாய் முத்தமிட்டு,உயர்கல்வி நாம் பயில,
குச்சி யெடுத்தடிக்கு மந்த குருவைப்போலம்மால்
மெச்சி நமைப்புகழ்ந்து மேதினியில் உயர்வு பெற
வச்சிருக்கும் சிறுவாட்டில் வளர்ந்துவிட்ட சேமிப்பால்
எத்திக்கும் புகழ்பேற்று, ஏற்றம்பேற கல்வி தந்து
காத்திட்ட கருணை தெய்வம் அன்னையன்றி யாருளரோ ?

ருசியாக பலவிதமாய் சுவையேற்றித்தான் சமைத்து
பசியாற நமக்களித்து பாசத்தையும் அதிற்கலந்து-நடு
நிசியாக இருந்தாலும் நாம் துயில,அவர் விழித்து
வசதியாய் நாம் வாழ தன் வாழ்வை அர்ப்பணித்து-தன்
உசுரையும் மதிக்காமல் நம் நலனைப் பெரிதா யெண்ணி
வசிக்கின்ற யுண்மைத் தெய்வம்,அன்னையை மறக்கலாமோ ?
                               -இளசை விஜயன்

அவசர உலகம்







அவசர உலகம்

குறுகிய செய்திகள்
இரு நிமிட நூடுல்ஸ்
இன்று திருமணம்,
நாளை பிரிந்திடல்
மடுவில் ஊசி
பெருகிடும் பாலும்
விளைச்சல் பெருக
விபரீத வுரங்கள்
நொடிக்கு வொரு நோய்
புதிதாய்ப் பிறக்கும்.

திரும்பும் திசையெலாம்
தீவிரவாதம்
ஒரு விசை யழுத்த
உலகம் அழியும்
வேகம் வேகம்
எதிலும் வேகம்
அழிவுப்பாதையில்
அவசர உலகம்
நிதானமிருந்தால்
நிம்மதி பிறக்கும்.

            -- இளசை விஜயன்

வாழிய ! வாழியவே !



பொதிகைமலை யுச்சியிலே புறப்பட்டாய யம்மா,
புண்ணியமா நதிகளிலே நீ வளர்ந்தா யம்மா,
இய லிசை நாடகமே உன் வடிவமம்மா- அதை
இன் றெமக்கு மனமுவந்து நீ அருள்வாயம்மா.

வாழிய ! வாழியவே !-நீ
வாழிய ! வாழியவே !

கல்தோன்றி மண்.தோன்றா காலத்தே- நீ
முன்தோன்றி மூத்த தழிழ்த் தாயம்மா :
சோல்லோடு பொருள் சேர்த்து - எழிலையெலாம்
சொல்லவே முடியாத அழகியம்மா !

                                                        (வாழிய )

கம்பரும்,வள்ளுவரும் உனைப் படைத்தார் -எங்கள்
கவிஞர் பாரதியும் உனை வளர்த்தார் ,
ஐம்பெருங் காப்பியத்தை அணிகலனாய் -நீ
அணிந்திருக்கும் அழகேயோர் அழகம்மா !

                                                      ( வாழிய )






   விடிந்தது காலை ! மகிழ்ந்தது உள்ளம் !

 
விடிந்தது காலை,விழித்தது உலகம்
வியத்தகு கதிரவன் விண்ணி லெழுந்தான்
இரவின் வேலையை இனிதேமுடித்து,
இந்துமதி யவள், ஆழியி லமிழ்ந்தாள்
காக்கைக் குருவி கருங்குயி லெல்லாம்
களித்தே யினிய கானமிசைக்க
பகலவன் கதிரொளி பட்டதனாலே
பச்சைப் பயிர்கள் பரவசமாகி
கானங் கேட்டுக் களித்திசைக் காட
ஆட்டமும்,இசையாற் அகமகிழ்ந் தாறு
சல சல வெனவே தாளஞ் சேர்க்க
அனைத்தையும் ரசித்த, அழகிய மலர்கள்
அகமும்,முகமும் மலர்ந்தே சிரிக்க
வண்ணமலரின் வனப்பில் மயங்கி
வண்டுகள் விருந்தாய், மதுவை ருசிக்க
விடிந்தது காலை ,விழித்தது உலகம்
இணைத்தது வுளத்தில் மகிழ்ச்சியின் வெள்ளம்.
 
 
                                                         -- இளசை விஜயன்