Friday, December 7, 2012

அருளன்றி நாடுவது வேறேதம்மா ?







அருளன்றி நாடுவது வேறேதம்மா ?




அழகை ரசிக்க ஓராயிரங் கண் போதாதம்மா ! – உன்
அருளையன்றி நாடுவது வேறேதம்மா ? -- அம்மா
                                       (அழகை ரசிக்க)
காதலனாம் சொக்கனோடு ஆட்சி செய்தாயே ,
மதுரையை ஆட்சி செய்தாயே :
கருணையுளங் கொண்டு காட்சி தந்தாயே .
                                       (அழகை ரசிக்க)
தினந்தொழும் பக்தருள்ளம்  நீ நின்றாயே   - அவர்
மனமுருகும் நிலை கண்டு உளம் நெகிழ்தாயே – அம்மா
                                       (அழகை ரசிக்க)
கிளி கொஞ்சும் கரங் கொஞ்சம் வழி காட்டுமா ? – நல்ல
வழிகாட்டி, வாழ்வுக்கு ஒளி கூட்டுமா ?
களிப்பினில்  மனமெழிற் கவி பாடும் போது – அக்
கவி கேட்டுக் களி நடம் புரிவாயம்மா – தாயே
                                       (அழகை ரசிக்க) 
                               

Monday, December 3, 2012






மதுரையாள்கின்ற நாயகியே !




வாழ்கின்ற நாளெல்லாம் வணங்குதல் வேண்டும் – மதுரை
ஆள்கின்ற நாயகி நீ, வரந்தர வர வேண்டும்.
                                           (வாழ்கின்ற)
நீள் கின்ற வாழ்க்கையிலே நிம்மதி வர வேண்டும் ;
ஏழ் பிறப்பும் உள்ளத்தி லுன் நினைவொன்றே போதும்,
                                           (வாழ்கின்ற)
சேர்கின்ற இன்னலெலாம் சென்று மறைய வேண்டும் ,
நேர்கின்ற இன்பம் மட்டும் நிலைத்திருந்தாற் போதும்;
சோர்வு வரும் நேரமெலாம் சுந்தர முகங் காட்டு,
வேர்விட்டு, நெஞ்சிலெழும் இனிமைமிகு பாட்டு.
                                           (வாழ்கின்ற)